Sunday, October 12, 2008

எட்டணாவுக்கு பொறி கடலை

ஆயிரம் விண்ணப்பங்கள், அறுநூறு தொலைபேசி வேண்டுதல்களுக்குப் பிறகு என் மனைவிக்கு வேலை கிடைத்தது. பில் கேட்ஸ் ரிட்டயர் ஆன பிறகு அவரது நாற்காலியில் என் மனைவிக்கு இடம் என்றெல்லாம் பீத்த முடியாதெனினும் மாத செலவுக்கு ஆகும்.

என் அலுவலகமும் அவளது அலுவலகமும் கிட்டத்தட்ட திருநெல்வேலிக்கும் சந்திர மண்டலத்திற்கும் உள்ள தூரம். சிறு வயதில் கீ கொடுத்த் கார் ஒட்டியதோடு கும்பிடு போட்ட பரம்பரை என்கிற பின்புலம் வேறு உண்டு, மனைவிக்கு.

முப்பது மைல் தொலைவை நடந்தோ ஓடியோ கடக்கும் பீ.டிஉஷா இல்லை. கடலோரம் வாங்கின காற்று என பாடிக்கொண்டே சைக்கிளில் பயணிக்க தகுந்த சாலையும் இல்லை. "ஆசன வாயில்" எனப்படும் வார்த்தையை பிரயோகித்து வசவு பாடிச் செல்வர் கார் பயணிகள். நாம் சாவுக்ராக்கி என்பதாக பொருள் கொண்டால் மன உளைச்சல் குறையும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு "மாநகரப் பேருந்து" என்று பெருந்தன்மையுடன் அழைக்கப் படும் "நடமாடும் சவப் பெட்டியில்" பயணிப்பதே உசிதம் என்று கருதினோம். வடக்கே சூலம் என்றெல்லாம் பார்க்காமல் பேருந்து வெள்ளோட்டம் செய்ய சனிக் கிழமை அன்று கிளம்பினோம்.
"இப்படி படித்தால் நாடு ரோட்டில் தான் நிற்பாய் " என்ற சிறு வயது அருள் வாக்கிற்கு ஒப்ப, நானும் மனைவியும் நாடு ரோட்டில் தேவுடு காத்தோம். கருப்பு தெய்வம், ஆலிலைக் கண்ணன் போல ஒரு சாரதி ஓட்ட பேருந்து வந்து நின்றது.
"வா குழந்தை. நானிருக்க பயமேன்" என்பது போல கருப்பன் உள்ளழைத்தான். ஆஹா இது அல்லவோ பிறவிப் பயன் என்று நானும் மனைவியும் மகிழ்ந்தோம். மூன்று மைல் தொலைவில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து மாற்ற வேண்டும். "மூத்திர சந்தை" விடவும் அசுத்தமான நிறுத்தம் அது. பில்லி சூனியம் ஆடியது போல ஒரு நெல் குதிர் நடந்து வந்து "எப்போ பஸ் வரும்" என்பதை "பட்டா வவுந்திருவேன்" என்ற தொனியில் விசாரித்து விட்டு போனது. இந்த ஊர் ஜாம் பஜார் ஜக்கு என்று எனக்கு தோன்றியது. கால்களை கப்பை போல விரித்து, முட்டியை மடக்கி மடக்கி இல்லாத பாட்டுக்கு நடனம் ஆடியவாறே நெல் குதிர் பேருந்துக்கு காத்திருந்தது.
பிள்ளை பிடிப்பவன் மாதிரி இன்னொருவன் வேறு வெல்வெட் கலரில் பாண்டும் சட்டையும் போட்டுக் கொண்டு சுத்திக் கொண்டிருந்தான். எங்கள் ஊரில் "காத்து கருப்பு" அடித்தவன் இப்படித்தான் திரிவான். இப்படியான ரம்மியமான சூழலில்மனைவியுடன் பேச்சு குடுத்து வசவு பெற திராணி இல்லாததால் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
சரியாக ஐம்பது நிமிடத்திற்கு பிறகு அடுத்த பேருந்தும் வந்து சேர்ந்தது. நெல் குதிர் ஏனோ ஏறவில்லை. "இந்த வண்டி துபாய் போகுமா" என்று நக்கல் கேள்வி எதுவும் கேட்க வில்லை நான். இருந்தும் நான் ஏதோ அவன் குடும்பத்தைக் கொச்சைப் படுத்தியது போல கூப்பாடு போட்டான், பேருந்து ஓட்டுனன்.
ஒருவாராக அவனை கொஞ்சிவிட்டு " ரெண்டு டிக்கெட் குடும்" என்றேன்.
"நீ எந்த நோட்டு வேணா குடு. சில்லறை கிடையாது"
"நாறப் பயலே. எங்க ஊரு பக்கம் வாடி ஒரு நாள். புளியமரத்தில கட்டிப் போட்டு நொங்கப் பிரிக்கறேன்"
பாஷை புரியாததால் ஆமோதித்து தலை ஆட்டியது சிடுமூஞ்சி கருப்பு.
"ஸ்ஸ்ஸ்ஸ் .. இப்பவே கண்ணே கட்டுதே ..போரும். இதோட நிருத்திகிவோம்" என்றவாறே இருக்கைக்கு நகர்ந்தோம். ஒரு கம்பெனிக்கு நானும் வரேன் என்று ஒரு மாபெரும் உருண்டை மனிதன், ஒரு பருத்த பின்புறம் கொண்ட பெண்மணி, கஞ்சா குடுக்கி, பல் போன இளம் யுவதி, மார்பு சட்டை விலகுவதை சட்டை செய்யாத நாடு வயது பெண் என்று பலரும் எங்களுடன் பயணித்தனர்.
கூடவே சொறி, படை மற்றும் கக்குவான் இருமல் என ஆரம்ப சுகாதார நிலைய கிராக்கிகள் வேறு சேர்ந்துகொண்டன. கையை உயர்த்தி வியர்வை நாற்றம் பரப்பும் பாதகர்கள் மட்டும் தான் பாக்கி. இருந்திருந்தால் "திடியூர் இலயமுத்தூர்" பேருந்துக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் இருந்திருக்காது.
முகத்தை "ழு" போல் நான் சுழிக்க, "கு" போல் மனைவி சுழிக்க, விதி, வாழ்க்கை மற்றும் ஜாதகங்களை நொந்தவாறு இறங்குமிடம் வந்து சேர்ந்தோம். பூக்காரி, பஜாரி, லாட்டரி சீட்டு "கே எஸ் எ சேகர்", ரூவாய்க்கு ஒரு பாக்கெட் முருகீய் என்று எந்த ஜமாவும் இல்லாத "தேமே" என்று இருக்கும் நடுக்க் காடு தன் நாங்கள் இறங்கும் இடம்.
எக்ஸ்குஸ் மீ.
ஹவ் டூ ஐ கோ டு ..... (மனைவியின் அலுவலக இடம்)
கீப் ஸ்ட்ரைட் . கோ பார் அபௌட் டூ மைல்ஸ் . டேக் த நார்த் டுவோர்ட்ஸ் லேக் ரோடு. யு வில் பி ரைட் தேர்.
மனைவி: என்ன சொல்றான்
நான்: ஆங். எட்டணாவுக்கு பொறி கடலை வாங்கி கொரிச்சுண்டே போ சொல்றான்.
மனைவி: போனா வந்திருமா?
நான்: இடம் வருமா தெரியாது. பொறி கடலை சாப்டா ..சு வரும்!
போங்கடா நீங்களும் ஒங்க பஸ் செர்வீசும். பொரிகடலையும் நடராஜவுமே பெட்டெர்.

2 of my fans were here!:

Anonymous said...

haha! that was sooo funny! LOL!!

Hindu Marriages In India on 2:56 AM said...

நல்ல கதை

 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template