Tuesday, August 26, 2008

செத்த பொழப்பு

இன்றும் அதுபோல் ஒரு நாள்!

பரதேசம் வந்தாகிவிட்டது. பளிங்கு காரும் பகட்டும் கிட்டவில்லை என்றாலும், ஊரிலிருப்போருக்கு நானும் என் புதிய விலாசமும் பற்றி பெருமூச்சுதான்.
எப் எம் ரேடியோவும் நட்புப் துணையும் இல்லாமல் பரதேசி போல பரங்கி ரேடியோ கேட்டுக்கொண்டு, கார் விடும் க்ரீச் ஒலியை நொந்துகொண்டு வேலைக்கு செல்கிறேன்.

இன்று என்ன வேலை முடிக்க வேண்டும் என்று சிந்தனை செய்யத் தேவை இருப்பதில்லை. அப்படி வெட்டி முறிக்கிற வேலை இல்லை என்றாலும் பொறுப்பு என்னவோ கண்ணை கட்டத் தான் செய்கிறது. பரங்கிக் கடன்காரன் வேறு சிங்க வேஷம் போட்டு என்னை கூண்டுக்குள் தள்ளி விட்டான்.

என்னடா சிங்கம் உருமவே இல்லை என்று கூண்டுக்கு வெளியே புகைச்சல். மகனே உன் சமத்து என்று பரங்கி பம்மாத்து பதில் வேறு கூறுகிறான்.
குமாஸ்தாவா , மாநேஜரா என்ற குழப்பத்திலேயே நாளும் பொழுதும் நிலை சேராத தேர் போல அல்லாடுகிறது அலுவல் வாழ்க்கை . நேர்முக நக்கல், மழுப்பலான இளக்காரம், மறைமுகமான அவதூறு என்று அலுவல் பரப்பில் அனல் சுடுகிறது.

பரங்கியை போட்டு தள்ளி விடலாம் என்றால் நாடில்லாத நாட்டில் இந்த வினை வேறயா என்று மனது நயமாய் எச்காரிகை போடுகிறது, இந்த எச்சரிக்கை மணி கிளம்பும்போது ஏனோ ஒலிக்கவில்லை .

இத்தனைக்கும் சம்பளம் அள்ளி குடுக்க வேண்டாம். கிள்ளி-யாவது குடுப்பார்கள் என்று பார்த்தால் கிள்ளினாலும் கல்லா குறைந்துவிடும் என்று, காசை கண்ணிலே காட்டுவதே இல்லை.

திண்ணையில் உட்காந்து தெக்கயும் மேக்கையும் பார்த்த இரவும் இல்லை. ஒண்டியாய் அலையுடன் பேசிய பெசன்ட்நகர் நடூ சாமமும் இல்லை. பிடித்ததைத் தொலைத்து விட்டு, திரவியம் தேடி உறக்கம் இல்லா உறக்கமும் இலக்கிலா பயணமுமாய் என்ன பொழைப்பு இது, செத்த பொழைப்பு!
 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template