Friday, August 07, 2009

பீரோ

பச்சை நிறத்தில் "க்ரீச்" என்று திறக்கும் பீரோவின் கனத்தையும் அகலத்தையும் வைத்தே " பொண்ணு வீடு பெரிய இடம் போல" என்று எடை போடும் அளவுக்கு, பீரோவுக்கு அந்த நாட்களில் அதன் பயன்பாட்டைத் தாண்டிய அடையாளம், அங்கீகாரம்.
என் வீட்டு பீரோவை வைத்தே என் குடும்பக் கதையை ஒரு அளவுக்குச் சொல்லி விட இயலும். பச்சை நிற பீரோவில் பட்டையாய் மருவி நிற்கும் கிழிந்த ராமர் பட்டாபிஷேக ஸ்டிக்கர்கள் நான் அப்போதே ஒரு க்ரியேடிவ் மார்கெடிங் மேதை எனறு அப்பாவின் அறையையும் தாண்டி பறை சாற்றியது.
அன்றைய பீரோக்களில் லாக்கர் என்றொரு அதீத சமாச்சாரம் உண்டு. அந்த புதையல் மேல் எனக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அதில் இருக்கும் ஹீ மென் ஸ்டிக்கர், அம்மா தர மறுக்கும் கண்ணாடி மூடி கொண்ட, பில்டின் பென்சில் கட்டர் கொண்ட பென்சில் டப்பா, நான் கிழித்தெறிய விரும்பும் என் சிறு வயது அம்மணகுண்டி போட்டோ , அம்மாவின் ஜி ஆர்ர் டி நகைகள் மற்றும் நகை சீட்டுகள், எங்கள் ஒரே பாம்பே ட்ரிப்பில் வாங்கிய கட் ஷூ, இன்னும் ஆயிரமே வருஷங்கள் உள்ளே இருந்தால் வயிரமாக ஆகியிருக்கும் மினு மினு கற்கள், இருவது வருடங்களுக்கு முன் அமெரிகாவிலிர்ந்து வந்த மாமியாரின் ஒர்படியின் மருமான் குடுத்த வாசனை முடிச்சு என்று அள்ளக் குறையாத புதையல்கள்.
ஒரு வகையில் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என்றவற்றை முதலில் எனக்கு அறிமுகப் படுத்திய தருணங்கள், என் அம்மா பொத்திப் பொத்தி வெறுப்பேற்றிய அந்த சிறு வயது நாட்கள்.
விடுமுறைக்கு மெட்ராஸ் செல்லும் ஒரு வாரத்திற்கு முன்னாலே, பீரோவில் அடித் தட்டில் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் நான் சேர்த்து வைத்த பொங்கல் பொடி, தீபாவளி போனஸ் போன்றவற்றை எண்ணி எண்ணி மாய்ந்து போயிருக்கிறேன். நூற்றி ஐம்பது ரூவாய்க்கு கிரிக்கட் பேட் வாங்கலாமா அல்லது வெளிநாட்டு ஸ்டாம்ப் வாங்கலாமா என்று கனவிலே குழம்பி யாருக்கும் தெரியாமல் நட்ட நாடு ராத்ரியில் பீரோவைத் திறந்து மறுபடியும் பணத்தை எண்ணிய நாட்கள் இன்றும் பசுமை.
அந்த க்ரீச் சத்தம் கேட்காமல் பீரோவைத் திறந்த கலைக்கு இன்று நான் சுவிஸ் பாங்கில் கொள்ளை அடித்திருக்க வேண்டும். என் க்ரிகாசாரம் , கம்ப்யூட்டரில் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறேன்.
வாரம் ஒரு முறை குடும்பத்தோடு சேர்ந்து பீரோ சாவியே தேடுவது வேறு விதமான ஒரு பொழுது போக்கு. மாலுக்கு சென்று கோழி பொறித்த எண்ணையில் பிரெஞ்சு பிரைஸ் சாப்பிடுவதை விட அது நன்றாகத் தான் இருந்தது.
அடித்துப் பிடித்து சீராக வாங்கிய கும்பா, பட்டுப் புடவை, வெள்ளி கொலுசு என்று, அடங்கிய மருமகளாய் அம்மா அனுபவித்த வருடங்களின் சாட்சிகள் இன்றும் அந்த பீரோவில் இருக்கின்றன.
அந்த பீரோவில் உள்ள புதையல்களை விட அதில் இருக்கும் நினைவுகளில் இன்று எனக்கு ஒரு கண். மறு கண்ணில் ஏக்கம்.

 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template