நடுத்தர வர்கத்திற்கும் கிராமங்களுக்குமே வாய்க்கப் பட்ட ஒரு சாபம் டவுன் பஸ். அதிலிருந்து விடுபட்டு குளிரூட்டப் பட்ட காரில் போகும் போது, டவுன் பஸ்சின் வாழ்வியல் பாடங்களை எப்.எம் கேட்டுக் கொண்டே அவதானிக்க முடிகிறது.
பாளை பஸ் நிறுத்தம். பஸ் நிற்கிறதோ இல்லையோ, என்னைப் போல நின்றே மெலிந்தவர்கள் பல பேர் இருப்பார்கள். பஸ் நிறுத்தத்திற்கு வெளியே உள்ள புளிய மர நிழலில் நிற்பதே பஸ் பிடிப்பதற்கு சாலச் சிறந்த உத்தி என்று பெரியோர்கள் கல்வெட்டில் எழுதாததால் பலர் உள்ளே நின்று சார டக்கர் காலேஜ் பெண்களையோ கான்வென்ட் மாணவிகளையோ சகோதரி போல பாவித்து சற்றே விலகி நின்றபடி பாசம் பாலிப்பார்கள். சிலர் பஸ் ஸ்டாண்டு பிள்ளையாரிடம் ஏதேதோ வேண்டிக் கொண்டு முக்கியமான கோரிக்கையான "சாமி பஸ் சீக்ரம் கெடைக்கட்டும்" என்பதை மட்டும் கோட்டை விட்டு விடுவார்கள்.
நூறு அடி தூரத்தில் பஸ்சைப் பார்த்த உடனேயே ஸ்கூல் பையை லாவகமாக தோளில் மாட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நமக்கும் மற்றவருக்கும் உள்ள ரிலேட்டிவ் மோஷன் எவ்வாறு உள்ளது என்பதை அனுமானித்து அதற்கு ஏற்றவாறு ஓடாவோ, நடக்கவோ அல்லது பறக்கவோ வேண்டும்.
கிட்டத்தட்ட் எல்லா பிகருகளும் வேப்பெண்ணெய் தடவி இருப்பார்கள் என்பதால் ரஜினி காந்த் போல் ஸ்டைல் செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. சுமாராக ஓடி வண்டியின் சக்கரத்திருக்கு தலையை விட்டு அழுக்கு எடுக்காமல் லாவகமாக தொத்தினாலே போதுமானது. என்னைப் போல் உடல் பலம் இல்லாத மன உறுதி படைத்த நோஞ்சான்கள் பெரிய ஸ்கூல் பேக் வைத்திருத்தல் மிகவும் முக்கியம். அதன் கனம், நீளம், இதிலிருந்து விடுபட்டு பறக்கும் கரப்பான் பூச்சிகள் எல்லாவற்றையும் தாண்டி முன்னேறும் பட்டாளம் மிகக் குறைவு என்பதால் பூட் போர்ட் இடம் கண்டிப்பாக நமக்கு தான்.
ஆர்வ மிகுதியில் உள்ளே நகர்வது மிகவும் ஆபத்தான ஒரு செயல். செவத்த மூதி என்று பலரின் வசவுக்கு உள்ளக வேண்டியிருக்கும் என்பதாலும் ஷூ கால்களை நேர்த்தியாக வெற்றிடத்தில் பாவிய படி நடக்க முடியாது என்பதாலும் வாசலுக்கு அருகிலேயே நிற்பது லோகக் க்ஷேமத்திற்கு நம்மாலான பங்களிப்பு. தவிரவும் கழுவாத கருவாட்டுக் குழம்பு சட்டி, பீடி, பட்டை சாராயம் ஆகியவற்றை சரி விகிதத்தில் சுமந்து வரும் மண்ணின் மைந்தர்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், முடிந்தவரை பஸ்சின் வெளியில் இருக்கும் ஏணியில் பயணிப்பது உத்தமம்.
தங்கள் பட்டப் படிப்பிற்கும் சட்டை அழுக்கிற்கும் தகாத ஒரு தளத்தில் அரசியல், ஆன்மிகம் மற்றும் உலக வர்த்தக நிலவரம் பேசும் பல்கலை வித்தகர்களிடம் வாயத் திறக்கும் முன் ஊதச் சொல்லி பிறகு பச்சை வளர்ப்பது நமக்கும் நம் குடும்ப பின்னணிக்கும் நல்லது. அதிலும் சுவர் முட்டி எனப்படும் ஒரு அசகாய சரக்கை ஏற்றியவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையால் நம் வயிற்றை முட்டித் தூக்கி விடுவார்கள். மீறி விலகினால் குடும்பம் மற்றும் பிறக்கத குழந்தைகளுக்கு அவப் பெயர் நிகழும் வகையில் சில தத்துவ முத்துக்களை உதிர்ப்பார்கள்.
என்னை போன்ற பள்ளி மாணவர்களுக்கு பிட் பாகெட் பயம் இல்லை. ஆனாலும் எவரது கடப்பாரை , சிமெண்டு சட்டி எப்போது நம்மைக் குத்திக் கிழிக்கும் என்ற பயம் இருப்பதால், சுவாலஜியில் படித்த வாட்சன் கிரீக் டி.என்.எ போல் வளைந்து நெளிந்து நிற்க வேண்டும். பட்டாலும் பரம்பரைக்குச் சேதாரம் இல்லாமல் பர்துக்க் கொள்வது "வரலாறு முக்கியம் அமைச்சரே" என்பது போல ஒரு முக்கியமான ராஜ தந்திரம்.
இதையெல்லாம் சமாளித்து முன்னீர்பள்ளம் பஸ் ஸ்டாண்டு வரும் போது கண்டக்டர் டிக்கட் மிச்ச பணத்துடன் காணமல் போயிருப்பார். கந்த சஷ்டிக் கவசம் சொல்லிக் கொண்டே ராட்சடஹ்ர்களைக் கடந்து கண்டக்டரிடம் செல்வதா இல்லை இறங்கி விட்டு கண்டக்டரிடம் கேட்பதா என்ற தடுமாற்றத்தில் பஸ் ஆரைக் குளம் பஸ் நிறுத்தத்திற்கு கிளம்பி இருக்கும்.
"ஆள் எறக்கம்! ஆள் எறக்கம்!" என்று கதறியவாறே , "போங்கடா நீங்களும் உங்க மிச்ச பைசாவும்" என்று மனதுக்குள் முனு முணுத்தவாறே பஸ்ஸில் இருந்து குதிக்க வேண்டியிருக்கும்.
மூச்சிறைப்பு, கால் வலி, தோல் வலி எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு மறு நாள் ஆட்டத்திற்கு தயார் ஆகா வேண்டும். இன்று இன்னொரு பயணம். இதுவும் கடந்து போகும்.