Tuesday, September 02, 2008

ஆயக்குடி காஸ்ட்யும்

மூன்று நாள் விடுமுறை வந்தால் எனக்கு ஒரே பதபதைப்பு தான் எப்போதும். ஆய்க்குடி போய்ட்டு வரலாமா என்று அப்பா மெதுவாக அம்மாவிடம் கேட்பார். kovilile
இந்தக் Kelvi "ஈராக்கில் பாம் போட்டு விடலாமா?" வகையைச் சார்ந்தது. பின்விளைவுகள் அதி பயங்கரமானது (எனக்கு மட்டும்).
மத்த ஸ்கூல் பசங்க எல்லாரும் உலகமயமாக்கல் கொள்கையின் படி பக்கத்து தேசங்களான கொச்சின், ஊட்டி, கொடைக்கானல் அல்லது குறைந்த பட்சம் மதுரையாவது போகையில் , நான் மட்டும் ஒவ்வொரு விடுமுறைக்கும் ஆயக்குடி கோவிலுக்கு பிக்னிக் போவதில் "புலி பசித்தாலும் புல்லைத் தின்னது" என்ற கோட்பாட்டின் ஊடாக எனக்கு ஏற்பு இல்லாமல் போனது. இருந்தாலும் என் இடுப்பு இன்ச் இருபத்தி நாலும் , மொத்த இடை நாற்பது கிலோவும் ஆகையால் "நண்டு நசுக்கு" என்று பரவலாய் அறியப்படும் வகையறாவில் தள்ளப்பட்டு ஒடுக்கபட்டேன்.
முந்தைய நாளே அப்பா "எங்க பேங்க்ல அக்கௌன்ட் வெச்சிருக்கான்.. மட்டோடர் வேன் சொல்லியாச்சு. நல்ல பையன். அனுப்பிருவான்" என்று "நேச நாடுகள் படை நமக்கு வான் வழித் தாக்குதல் பலம் தரும்" என்பது போல் மிடுக்காக அறிவிப்பார். ஆயக்குடி இயந்திரம் சுழல ஆரம்பிக்கும்.
விடுமுறை ஆகையால் "வேர்ல்ட் கப் குக்கிராம கிரிக்கெட்" வேறு நடக்கும். "என்னலே இப்பிடி கால வாரி விடுதே ? ஏற்கனவே நம்ம டீம் லே ஒம்போது பேர் தானே இருகோம். நீ தானே ஒப்பனிங் பத்ச்மேன். தம்பு, ஜெகன் எல்லாம் இப்போ ஒரே டீமாம் லே. நம்ம பயலுவோ பத்து பாலுக்கு தாக்குபிடிக்க மாட்டானுவ. எ என்னடா எ ..வாடா" என்று பால் சரவணா ராஜ் ஒப்பாரி போடுவான். நான் இல்லையென்றால் டீமும் இல்லை பேட்டும் இல்லை என்பது டீம் விதி. இதுக்கு மேல் ஒப்பேறாது என்னும் தருவாயில், "பேட்ட மட்டும் அழிக்கம்பி வழிய தூக்கிப் போடுலே ப்ளீஸ்" என்று சமரச உடன்படிக்கை தாக்கல் செய்வார்கள். நானும் தியாகி திக்ப்ரம்மதாஸ் ஆவேன்.
தூர்தர்ஷனில் வேறு டே அண்ட் நைட் மேட்ச் ஒளிபரப்புவார்கள். "ஓவர் டு டெல்லி" போடும்போது கரெக்டாக அப்பாவின் ஹீரோ ஹோண்டா வந்து சேரும். மூன்று பேர் பாமிலிக்கு எதுக்கு மட்டோடார் வேன் என்று (நியாயமான) கேள்வி எழலாம். அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, சிறிய நண்டு, பக்கத்தாத்து மூக்குபொடி மாமா, மூ மாமி , எதிராள்ஆத்து சேகர், தெக்லாத்து ராமா மாமி என்று துற கஜம் மற்றும் பதாதிகளோடு போனால் தான் ராமசாமி சாம்ராட் என்று அழைக்கப் படுவாய் என்று யாரோ தப்பாக ஏத்தி விட அப்பா படையோடு தான் பிக்னிக் கிளம்புவார்.
ஏம்மா ... நாம நாலு பேர் (பாட்டி சேத்து) மட்டும் ஒரு கார் வெச்சுண்டு போனா போராதா? இவாள்லாம் வேற எதுக்கு மா?
போடா. செட்டா போனா தான் நன்னா இருக்கும். ஒனக்கு ஒண்ணுமே பிடிக்காது. மணி ரெண்டாபோறது. வேனையும் காணும் ஒன்னும் காணும். நா கொஞ்ச நேரம் தூங்கப் போறேன். எழுப்புடா வண்டி வந்தா. இது அம்மா.
ரெட்டைக் கதவின் மேல் நுனியில் வெளவால் போல தொங்கிக் கொண்டு தோல் பட்டைக்கும் கன்னத்திற்கும் நடுவே போன் ரிசீவரை வைத்துக் கொண்டு அப்பா "மட்டோடார்" ஓனரிடம் "எப்போ வருவீங்க" என்பதை கோபத்திற்கும் கனிவிற்கும் நடிவிலான தொனியில் கேட்பார். மழை பெஞ்சாலும் பெய்யும் என்ற ரீதியில் மட்டோடாரும் "ஆங்... இப்ப வந்திருவான் சார் பையன். எப்பமே அனுப்பியாச்சே." என்று "வேன் நிலை" அறிக்கை வாசிப்பார். அதற்குள் வாசலில் வேன் வந்து நிற்கும்.
என்னப்பா லேட் ஆய்ருச்சா?
ஆமா சார். எப்பமே வந்திட்டேன். இங்கன அக்கிரகாரத்துக்கு வாரதுக்குள்ள போதும் போதும்னு ஆய்ட்டு. சவத்த ஒரு ரோடு போட மாட்டேன்காணுவ.
ஒரு அஞ்சு நிமிஷம் இருப்பா. கிளம்பிரலாம்.
டேய். இந்தா இந்த இலைய காலுக்கு அடில போடு. பாயச தூக்கு பத்திரம். அதையும் காலுக்கு அடியிலேயே வெய்யுங்கோ. டேய் கார்த்தி ...காஆர்த்த்தீஈ (சித்தப்பாவின் குரலில் ராட்சச தன்மை கூடும்). நண்டு வண்டு சேரும்.
ஏதோ விர்ஜின் காலாக்டிக் விமானத்தில் சந்திர மண்டலம் போகிற மாதிரி வேண்டுதல் பலமாக இருக்கும். வண்டிய பிள்ளையார் நிப்பாட்டு டே. வடல் போடணும். முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு பந்தோபச்த்து முச்தீப்புகளை நினைத்தால் இன்றும் பசுமையாக இருக்கிறது.
இதெல்லாம் நடக்க, நான் மட்டும் ரௌத்திரம் பழகிக் கொண்டிருப்பேன். கொண்டு வந்த ரெண்டு பாடாவதி காசெட்டும் போட டேப் இருக்காது, இல்லை வேலை செய்யாது. நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்பிடி இருக்கு என்று வயசுக்கு மீறி பெரிதாய் வருத்தம் அடைவேன்.
சுரண்டையில் பன்னீர் , ஆலங்குளத்தில் இளநீர், சாம்பவர் வடகரையில் ச்ரமப் பரிகாரம் என்று ஊர்வலமாய் ஒரு வழியாக ஆய்குடி சென்றடைவோம் . இந்த இடத்தில் சோம்பல் முறிக்கவும்.
இப்பொழுது ஒரு அற்புதம் நிகழும். அது வரை பன்னீரும் சந்தன வாசமும் பெற்ற ஜி ஆர் டி கைப்பை , அக்குளுக்கு இடம் மாறும். விரிந்த நிலையில் முப்பத்தி ரெண்டு இன்சும் முப்பதாயிரம் முடியுமாக இருக்கும் மார்பில் அங்க வஸ்திரம் கட்டப் படும். சந்தனம், வியர்வை, விபூதி, பன்னீர் என்று கலவையாய் வாசனை கமழ அப்பா காட்சியருளுவார். இதாகப்பட்டது ஆய்குடி காஸ்ட்யும்.
சாமிக்கு "ஒய் விச்சயா இருக்கீரா" என்று சம்பிரதாயமாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு டும்டேக்ஆவில் (கெட்ட வார்த்தை) எறும்பு ஏறாத படிக்கு ஜாக்கிரதையாய் மணி மண்டபத்தில் அமர்ந்து இட்டிலியும் சட்டினியும் சாப்பிட்டு விட்டு (வெக்கம் இல்லாத பாமிலி) Balasupramaiyarai தரிசிக்க முனைவோம்.
(ஆய்குடி தொடரும் )

3 of my fans were here!:

Dr. L. Ramakrishnan on 4:48 AM said...

Dear Ashwin,

I am not exaggerating. The style is quite good; appears to be similar to that of early days Sujata and the Delhi group. You can build on this ....

Good luck

Ramakrishnan

Ashwin on 10:28 AM said...

Thanks mama! Who is this delhi group btw?

- Ashwin

Dr. L. Ramakrishnan on 7:26 PM said...

Dear Ashwin,

Sujatha, Ashokamitran and Indra Parthasarathy (not N. Parthasarathy) formed this Delhi group. Their writings in those days (1960s) (e.g. in Kanayazhi) were really inspiring and different from those of the authors from Madras and the down south.

Love
Ramakrishnan

 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template