Saturday, May 14, 2011

சிங்கையில் சிங்கிச்சா

உலக வர்த்தகத்தில் ஜப்பாலக்கடி கிரிகிரி வேலைகள் செய்ய வேண்டியுள்ளது , உங்களால் வந்து ஒரு கை தர முடியுமா என்று ஒரு ஓலை வந்தது அடியேனுக்கு ஒரு மாதம் முன்பு. கை என்ன காலே வெச்சாப் போச்சு என்று தற்சமயத்திற்கு ஜாகையை மாற்றிவிட்டேன்.

ஐம்பது வெள்ளிக்கு வாடகைக்கு ஹோட்டல் அறை கிடைக்குமா என்று விசாரித்ததில், "நூறுக்கு கொறவா கெட்டாது சார்" என்ற பொருளில் சீன மங்கை முறுக்கிக் கொண்டதால், வேறு வழியின்றி பேக்பெகர்ஸ் எனப் படும் வெளிநாட்டு குறவர்கள் தங்கும் ஹாஸ்டல் விடுதியில் தங்க முடிவு செய்தேன்.

ஆன்லைனில் அலசியதில் மிக்சட் டார்ம் ரூமில் தங்கினால் பல நாட்டு பெண்கள் வர போக இருப்பார்கள். சற்றே தொப்பையுடன், வாயில் சாம்பார் வாடையுடன் இருக்கும் இந்திய ஆம்பிளைகள் என்றால் அள்ளி முகருவார்கள் என்று அறிவுத்தியிருந்தார்கள். எதற்கும் பழம் நழுவி விழட்டுமே என்று நானும் பால் வடிய டார்ம் ரூமில் ஏணிப்படி ஏறி இலவு காத்துக் கொண்டிருந்தேன்.

அநியாயத்திற்கு ழ, ஆழ் போட்டு ஆங்கிலேயன் போல் பேசியதில், ஒரு டச்சுக் கிளி (சற்றே பூசியது போல் இருந்ததால் பருந்து எனவும் கொள்ளலாம்) நாஷ்டா ஆச்சா என்ற ரீதியில் நட்பு பாராட்டியது. "ஆங்.. எங்க ஊரு உட்லண்ட்ஸ் ஹோட்டல் இங்கன இருக்கு. செத்த வாறியா? அண்டிப் பருப்பு போட்டு பொங்கலும் வடையும் தருவாக. மொருமொறுன்னு இருக்கும் " என்று அடி போட்டதில் பருந்து பம்மி விட்டது.

ஒருவாறாக மூன்று நாட்கள் கழித்து, இப்படியே லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தால் நா உன்னோட டூவாக்கும் என்று டச்சுக் காரி சினுங்கியதில், சீறு கொண்டு எழுந்த சிங்கமென சிங்கையில் ஒரு சீரிளங் காளை சிலுப்பிக்கொண்டு டின்னர் சாப்பிடக் கிளம்பியது. நா மொதல்ல கீழ போவேனாம் நீங்க பின்னாக்குல கீழ வருவீயளாம் என்று டச்சு கூற எனக்கோ மனசே டச்ச் ஆகிவிட்டது.

மாமனார் மூன்று வருடத்திற்கு முன்பு அவரது மகளை எனக்கு கட்டிக் கொடுத்த போது தந்த பவுல்கரி வாசனைத் திரவத்தைப் பீச்சிக் கொண்டு கீழே சென்ற எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது (தான்). அவன் ஒரு மெக்சிக்கன். இதோ இதுவும் நம்ம கூட தான் வரும் என்பது போல அவனிடம் அது சொல்ல, அவனும் வேறு வழியின்றி ஆமோதிக்க, நான் பெட்ரோமாக்ஸ் லைட் தூக்க ஆயுத்தமானேன்.

கிளார்க் கீ என்ற இடத்திற்கு போவோம் என்றான் மெக்சிக்கன். செல்லும் வழியில், நானும் ரௌடிதான் என்ற வகையில் எனக்குத் தெரிந்த பாரிஸ், நியுயார்க் நகர இரவு வாழ்க்கை பற்றி அளந்து விட்டுக் கொண்டு வந்தேன். என்னுடைய இரவு வாழ்க்கை என்பது கெட்டித் தயிர் சாதமும், காலையில் சமைத்த வெத்தக் கொழம்பும் .

கிளார்க் கீ கிட்டத் தட்ட இருபத்தி மூன்றாம் புலிகேசியில் வரும் அந்தப்புரம் ரேஞ்சுக்கு, இரவு பன்னிரண்டு மணிக்கும் சப்பை மூக்கு மங்கையர் சூழ ஜம்மலக்கடியாக இருந்தது. பருந்தும் அதன் பிரண்டும் பிரான் (கண்ணன் அல்ல) உணவுக்கு ஆடர் செய்ய, நான் மாட்டுக்கு சீஸ் ஸ்டிக்கும் லைம் சோடாவும் உள்ளேற்றி விட்டு ஆற்றாமையை மட்டும் வெளியேற்றிக் கொண்டிருந்தேன். மணி அப்போவே ஒண்ணு. கண் ஒரு புறம் கட்ட, பசி ஒரு புறம் முட்ட, விளக்கை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தேன்.

அதற்குள் டெக்ஸ்-மெக்ஸ் உணவு முறை, பைக் ஓட்டும் கலாச்சாரம், விஸ்கியில் இருக்கும் ஆண்மைத் தனம் என்று மெக்சிக்கன் சூடேற்றிக் கொண்டிருந்தான். நடுவில் அவன் செய்த ஒரே நல்ல காரியம் "லெட்ஸ் செக் அவுட் எ டான்ஸ் பார்" என்றது. இந்தப் பட்சி போனால் என்ன, ஒரு அன்னப் பட்சி மாட்டாமலா போய்விடும் என்று மனதுக்குள் ஒரு மணி அடித்தது (அதும் ஒரு மணிக்கு).

பல டான்ஸ் பார்களையும் அதன் ஸ்தல புராணங்களையும் விவரித்தவாறே மெக்சிக்கன் வழிநடத்த பருந்து , பகவானைப் பார்த்தது போல பரவசத்தில் இருந்தது. அப்படியே "கெட்ட பெண்" என்று பொருள் படும் ஒரு டான்ஸ் பாரில் நுழைய எண்ணினோம். இருபத்தி ஐந்து வெள்ளி, அதற்கு ஒரு கிளாஸ் பீர் என்பது நுழைவுக் கட்டணம். ஆறு நாள் பொங்கலும் வடையும் போச்சே என்று மானதுக்குள் மறுகிக் கொண்டாலும், உள்ளே செல்லும் பெண்கள் "சும்மா வாங்க சார், பாத்து போட்டு தருவோம்லே" என்று ஐ சி ஐ சி ஐ கடன் ஆபீசர் போல புன்னகையோடு உள்ளே செல்ல, மனசு லேசாகி பேஸ் ப்ரெஷ் ஆனது.

உள்ளே சென்றதும், சார் இந்த டோக்கனை எங்க குடுத்தா ஆப்பிள் ஜூஸ் தருவா? என்று கேட்டதில், போய்யா என்று தள்ளாத குறையாக பௌன்சர் என்னும் கோவணம் கட்டாத பயில்வான் நகற்றினான். அதற்குள் தூண் மேல் மெக்சிகோ சாய அவன் மேல் டச்சு சாய்ந்தது. எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வது என்று காதல் பறவைகள் நடுவே புகுந்தேன்.

ஹே கைஸ். வாட்ஸ் அப் ?

... (பதில் இல்லை)

யு கைஸ் வான டான்ஸ்?

-- ம்ம்ம் .. நோ ...வி ஆர் டாக்கின் அவுட் ஹியர்

மதியாதார் பார்வாச்சல் மிதிக்கவேண்டாம் என்றபடி நகரலானேன். அங்கு ஒரு மரத் தமிழச்சி வேப்பிலை இல்லாமல் பேய் ஒட்டிக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு அனுமானத்தில் அவள் பூர்வீகம் சங்கரன்கோவில் பக்கம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு, நமக்கு திருநவேலி பக்கம் என்றபடி பனிக் கட்டி உடைக்க முயன்றேன். அவள் முப்பாட்டன் மூன்று தலைமுறைக்கு முன்னரே கப்பல் ஏறி விட்டான் என்பதும் அவள் தற்போது ஒரு சீன வாலிபனின் நண்பி என்பதும் அறியலான பின் (அதாவது அந்த சீனாக் காரன் முட்டியை மடக்கிய பிறகு), உங்க பீருக்கும் வேணா நாமளே காசு கெட்டீரலமே என்று சமாதனம் செய்துவிட்டு நகர்ந்தேன்.

அங்க கும்பலாக உரசிக்க் கொண்டு ஆடும் மேடைதான் நமக்கு லாயக்கு என்று லேட்டாக எனக்கு உதித்தது. அவ்வாறே, அகஸ்மாத்தாக கும்பலுக்குள் நுழைந்து, ஹெட் பாங்கிங் எனப்படும் மண்டைக் குத்தில் ஈடுபட்டேன். ம்ஹும்ம். அப்படியும் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்ப்படிருக்க வில்லை. அவனவன் தள்ளி வந்திருந்த பெண்டிர் அவனவனுடயேவே ஆடிக் கொண்டிருந்தனர். பேயாட்டம் போட்ட சங்கரன்கோவில் பெண்ணின் சீன நண்பன் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் ஆடிக் கொண்டிருந்தான். அடப் பாவிகளா இதும் செட்டப்பா? அப்றோம் ஏண்டா என்ன சேத்துக்கலை?

இது இனிமேல் தோதுபட்டு வராது என்று " ஐ வில் கேச் யு கைஸ் இன் தி மார்னிங்" என்று டச்-மெக்சிக்க திசையில் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

மூணு மணிக்கு எது பஸ்சு? குடித்து குடி கெடுக்கும் மற்றவர் எல்லாம் டாக்ஸிக்காக காத்திருக்க, மூன்று கிலோமீட்டர் நடந்து வந்து, மீண்டும் டார்மில் படுத்துக் கொண்டேன். நடுவே தொலைந்து போய், நடக்க முடியாமல், மண்டி போட்டு இளைப்பாறி, மரத்தின் மறைவில் ஒன்றுக்கு அடிக்கலாமா என்று யோசித்து...ஸ்ஸ்ஸ் ..அப்பா...ஒரு வழியாக டார்ம் வந்து சேர்ந்தேன்.

நைட்டு மூணு மணிக்கு ரயிலும் பஸ்சும் கெடயாதுன்னு உனக்கேண்டா அப்போவே தோணல? என்று கால்கள் கதற, உத்திர் பலம் ஏசோ தைர்யம் சொல்லிப் படுத்துக் கொண்டேன்.

3 of my fans were here!:

joshimukard on 2:10 AM said...

LOL. simply superb. I think you should write more in Tamil and in this style. An English translation of this post could nowhere come near the beauty of this one. Awesome.

joshimukard on 2:11 AM said...

I'm a fan of Dubuku, the think tank. While reading this post of yours, I felt like reading Dubuku.

Ashwin on 5:17 AM said...

@ Joshi

Thanks for your paaraattoos!

I also read dubukku. I think we are all heavily influenced by the great sujatha.

Becoming old, means less and less interesting encounters to write about, I guess. So whenever I get to write about a new experience/encounter, I try to make it in Tamil.

lets see if I can make a new sodhapal to blog about it ;)

 

The Ashwin Ramasamy Show Copyright © 2009 Cookiez is Designed by Ipietoon for Free Blogger Template